சென்னை: கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மா.சுப்பிரமணியன் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியாக இல்லாததால், வட்டார மருத்துவ அலுவலர்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவ பார்க்க வந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து,  அங்குள்ள பிரசவ அறை, பிரசவித்த தாய்மார்கள் அறை, பல் மருத்துவ பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், வெளிநோயாளிகள் பிரிவு, ஆய்வுக் கூடம் மற்றும் மருந்தகம் போன்றவற்றுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பல குறைபாடுகளை கண்டறிந்தார்.

இதுகுறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், மருத்துவக் கட்டமைப்புகளின் பல்வேறு பிரிவுகள் சரிவர செயல்படாமல் இருந்ததற் காக வும்,  குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், பிரசவித்த தாய்மார்கள் அறை சரியாக பராமரிக்கா வண்ணம்  இருந்ததைப் பார்த்து, அதுகுறித்து, வட்டார மருத்துவ அலுவலர் சாந்தகுமார் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.