சென்னை: தமிழ்நாடு மீது கடந்த திமுக அரசின் காலக்கட்டத்தில் வாங்கிய கடன் குறித்து அமைச்சர் கீர்த்தனா கடுமையாக விமர்சனம் செய்த நிலையில்,  முன்னாள்  திமுஐக  அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்,.

அமைச்சர் கீர்த்தனாவின் , இதுபோன்ற பொய்யும், புனைக் கதைகளுக்கும் கடிவாளம் போடுவது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக அரசில் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கீர்த்தனா. இவர் பதவி ஏற்றது முதல்  பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சட்டப்பேரவையில் பொறுப்பேற்க வந்தபோதே சான்றிதழை மறந்தவிட்டு வந்தது, பிற மொழி ஊடகத்திற்கு இந்தியில் பேட்டியளித்தது, சட்டப்பேரவை வளாகத்தில் மாற்றுத்திறனாளி குறித்து பேசி அதன் பிறகு மன்னிப்பு கோரியது  என பல சர்ச்சைகளில்  சிக்கி வருகிறார். இதனால், சமூக வலைதளங்களில், இவர் குறித்து டிரோல்கள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவகாசியை சேர்ந்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா,, முந்தைய அரசு பத்தரை லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு, கஜானாவை கழுவிவிட்டு சென்றுவிட்டார்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஏற்கனவே கடன் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிடும் என முதல்வர் கூறியிருப்பதாகவும், கடந்த ஆட்சி காலத்தில் இவ்வளவு கடன் வாங்கியது, எங்கே சென்றது,  என்ன நடந்துள்ளது என்பது முதலில் எங்களுக்கு தெரிய வேண்டும், உரிய கால அவகாசம் கொடுத்தால் அனைத்தையும் செய்வோம் என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமைச்சர் கீர்த்தனாவுக்கு முன்னாள் நிதியமைச்சரான தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அமைச்சர்  கீர்த்தனா, உண்மைக்கு புறம்பாகவும், அடிப்படை புரிதல் இல்லாமலும் பேசுவதாக அவர் சாடியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், “பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவர்கள் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு  எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு  மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும்.“ என கூறியுள்ளார்.

மேலும், “அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனினும், அரசு நிர்வாகத்திலும்,  அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளர் அவர்களும்  இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா.? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா.?“ எனவும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், “பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவர்கள் அவதூறு…

— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]