
சென்னை:
தமிழக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மோசடி வழக்கு பதிவு செய்த நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார்குடியைச் சேர்ந்த குமார் என்பர், தன்னிடம் ரூ30 லட்சத்தை அமைச்சர் காமராஜ் மோசடி செய்துவிட்டார் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. ஆனால் தமிழக காவல்துறையினர் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யவில்லை
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் சிபிஐக்கு வழக்கை மாற்றப்போவதாக எச்சரித்தது. இதையடுத்து நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம், அமைச்சர் காமராஜ் மீது இபிகோ 420 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார். உச்சநீதிமன்றத்தில் இதை தமிழக அரசு பிரமாணப் பத்திரமாகவும் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் நன்னிலம் டிஎஸ்பி அறிவானந்தம் தேனி மாவட்டத்துக்கு சமூக நீதி மனித உரிமை டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
மன்னார்குடி டிஎஸ்பி பணியிடம் ஒரு மாத காலமாக காலியாக இருந்து வருகிறது. அதனால் அந்த பகுதி புகார்களையும் நன்னிலம் டிஎஸ்பி கண்காணித்து வந்தார். இந்த நிலையில் நன்னிலம் டிஎஸ்பி மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
420 வழக்கு பதியப்பட்டுள்ளதால் அமைச்சர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வழக்கை பதிந்த டி.எஸ்.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
[youtube-feed feed=1]