தூத்துக்குடி:

தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கடந்த ஏப்ரல் 9ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. போராட்டம் நடத்தியவர்களுக்கு 98 நாட்களாக தமிழக அரசு பாதுகாப்பு அளித்தது.

மக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதன் காரணமாக வன்முறை ஏற்பட்டது. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வன்முறையில் பாதிக்கப்பட்ட 54 பேருக்கு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரது உடல் பிரேத பரிசோதனை முடிந்துவிட்டது. ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆலை இயங்க கூடாது என அரசும் எண்ணம் கொண்டுள்ளது. தண்ணீர் மற்றும் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

புகைப்படம் உதவி ஏஎன்ஐ: நன்றி