சென்னை: மாநிலத்தின் வளர்ச்சி குறித்து தான் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விழாவில் பல்வேறு திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் விழா முடிந்த பின், தனியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அவர் ஆலோசித்து உள்ளார். முதல்வர், பிரதமர் மோடி இடையேயான ஆலோசனையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
ஆலோசனையில் கூட்டணி குறித்தும், தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாகவும் பேசியதாக தகவல் வெளியானது. இந் நிலையில், பிரதமர், முதல்வர் இடையேயான ஆலோசனை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பிரதமர் அரசு முறை பயணமாகத்தான் சென்னை வந்தார். வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையால் வடசென்னை மக்களின் கனவு நிறைவேறியது. பிரதமரை, முதல்வர் சந்திப்பது என்பது சாதாரணமான ஒன்றுதான்.
பிரதமர் 100 சதவீதம் அரசு முறை பயணமாகத்தான் வந்தார். ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, பல்வேறு திட்டங்கள் குறித்து நிதி ஒதுக்கீடு குறித்து சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டணியில் எந்த பிரச்சனையும், குழப்பமோ இல்லை, வலுவாக தான் உள்ளது. உரிய நேரத்தில், உரிய தருணத்தில் சரியாக நடக்கும் என்று கூறி உள்ளார்.