சென்னை,

ன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் அமைச்சர் ஜெயக்குமார்  ஆய்வு செய்தார். அதையடுத்து தமிழக அரசு சார்பில்  நிவாரணம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த 23ந்தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான வன்முறையின்போது, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு உதவியதாக நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் போலீசார் வன்முறை வெறியாட்டம் நடத்தினர்.

இதில் பல இடங்களில் தீ வைக்கப்பட்டது. மீனவ மக்களும் கடுமையாக தாக்கப்பட்டனர். வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. போலீசார் வன்முறையில் ஈடுபட்டது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை உண்மை அறியும் குழு பார்வையிட்டு போலீசாரின் வன்முறை குறித்து அறிவித்தது.

அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

நேற்று ஐ.டி. ஊழியர்கள் குழுவினர் சென்று பார்வையிட்டனர். மேலும் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றனர்.

இதையடுத்து தமிழக மீன்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து நாளைய சட்டசபை கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் தெரிகிறது.