டில்லி
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்நாடு மூலமாக மாநிலங்களவை உறுப்பினர் ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பாஜக அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் பதவி ஏற்றுள்ளார். அவர் மக்களவை தேர்தலில் போட்டியிடாததால் மாநிலங்களவை உறுப்பினராக வேண்டிய நிலை உள்ளது. ஆகவே அவர் ஏதாவது மாநிலத்தின் மூலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பில் ஒரு உறுப்பினர் கூட வெற்றி பெறாததால் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க அவரை தமிழ்நாடு மூலமாக மாநிலங்களவை உறுப்பினராக்க பாஜக முயன்று வருவதாக சொல்லப்படுகிறது அடுத்த மாதம் மாநிலங்களவையில் தமிழ்நாடு உறுப்பினர்கள் ஆறு பேர் ஓய்வு பெறுகின்றனர்
இந்த ஆறு பேரில் நால்வர் அதிமுகவினர். தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையின் படி அதிமுகவினரால் மூவரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதிமுக கூட்டணி சார்பில் பாமகவுக்கு மாநிலங்களவையில் ஒரு இடம் அளிக்க வேண்டும். எனவே மீதமுள்ள இரு இடங்களில் ஒரு இடத்தில் ஜெய்சங்கரை தேர்வு செய்ய பாஜக யோசித்து வருகிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அமைச்சராகவில்லை. இந்நிலையில் அதிமுக தன்னிடமுள்ள இரு மாநிலஙகளவை இடங்களில் ஒன்றை பாஜகவுக்கு விட்டு தருமா என்பது சர்ச்சைக்குரியதாகும்.
அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து ஜெய்சங்கரை தேர்வு செய்ய முடியாமல் போனால் குஜராத் மாநிலத்தில் இருந்து மக்களவைக்கு அவரை தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் மாநில சட்டப்பேரவையில் ஜெய்சங்கரை தேர்வு செய்ய போதுமான உறுப்பினர்கள் உள்ள போதிலும் பாஜக தமிழ்நாட்டையே எதிர்பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.