கோவை:  திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வருபவர்  ஐ.பெரியசாமி. இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் அவரை   கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பமுகிறது.    வயிறு தொடர்பான பிரச்னைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சர்களில் சீனியர்களில் ஒருவராக இருப்பவர் ஐ.பெரியசாமி. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும், திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் தற்போது பதவி வகித்து வருகிறார்.  இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. அதற்காக சிகிச்சையும் எடுத்து வருகிறார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வார்.  தற்போது திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

ஏற்கனவே கடந்த  ஆகஸ்டு மாதம்,  திடீரென வயிற்று வலி  ஏற்பட்ட நிலையில்  மதுரை யில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ள நிலையில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.