சென்னை
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்புவை அமைச்சர் கீதா ஜீவன் மணிப்பூர் விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார்.
நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார். இவர் சமீபத்தில் தன்னைப் பற்றி ஆபாசமாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் பேட்டி அளித்தார். அதன்படி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
தற்போது மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழக அமைச்சர் கீதா ஜீவன்,
”இதயம் உள்ள எவராக இருந்தாலும் மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை வெளிப்படுத்திய ‘வீடியோ’ காட்சிகளைத் தொடர்ந்து பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நெஞ்சத்தை உலுக்கி எடுக்கிறது. ஒரு பெண்ணாக, இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டு பதறுகிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதுபோன்ற கொடூர நிகழ்வுகளில் பெண்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும், தேசிய மகளிர் ஆணையம்தான்.
மேடைகளில் பேசுபவர்கள், ஊடகங்களில் விவாதிப்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் உள்ளிட்டோர் பொதுவான முறையில் பெண்களை குறித்துப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் விமர்சித்தாலும் உடனடியாக, தானாக முன்வந்து அதனை விசாரிக்கிறது தேசிய மகளிர் ஆணையம். இதுவும் அதன் கடமைதான்.
பேசுவதற்கே இத்தனை கடமை உணர்ச்சியுடனான செயல்பாடு என்றால், மணிப்பூரில் மாதக்கணக்கில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்குதல் மீதான நடவடிக்கை என்ன? இத்தனை நாளாக கண்டும் காணாததுமாக இருந்தது ஏன்?
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார்? பா.ஜ.க.விலும் மகளிர் பிரிவு இருக்கிறது. அதன் தேசிய அளவிலான தலைவராக இருக்கக்கூடியவர் என்ன செய்து கொண்டிருந்தார்?”
எனக் கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு இது குறித்து ஏற்கனவே டிவிட்டரில்,
எந்தவொரு சூழ்நிலையிலும் இத்தகைய குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனையைத் தவிர வேறு எதையும் கேட்க முடியாது. இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், இதனை வேடிக்கை பார்த்தவர்களையும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வகுப்புவாத கலவரங்கள், குடும்பச் சண்டை, தனிப்பட்ட பழிவாங்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளுக்கு பெண்கள் குறிவைக்கப்படுகிறார்கள். சில ஆண்கள் எவ்வளவு முதுகெலும்பில்லாதவர்கள், கோழைத்தனமானவர்கள், பாதுகாப்பற்றவர்கள், மனிதாபிமானமற்றவர்கள் என்று இது காட்டுகிறது’
என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்