திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் எ வ வேலு விளக்கம் அளித்துள்ளார். 

தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்கு  உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி ஆகிய 9 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் விளை நிலங்களைத் தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாகத் தொழில் வளாகம் அமைப்பதற்காக கையகப்படுத்த முடிவு செய்தது.

கடந்த 150 நாட்களுக்கும் மேலாக இதனை எதிர்த்து விவசாயிகள் போராடிவந்தனர். இவர்களில் 7 விவசாயிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்று திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நடத்திய செய்தியாளர் சந்திப்பில்-

”செய்யாறு சிப்காட்டிற்கு 55 தொழிற்சாலைகள் வரவுள்ளன. தொழிற்சாலை வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும்.பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டே சிப்காட் அமைக்கப்படுகிறது. குண்டர் சட்டத்தில் கைதான 7 பேரும் எட்டு வழிச்சாலை போராட்டத்தையும் முன் நின்று நடத்தியவர்கள். அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு, எதிர்ப்பு தெரிவித்தார்கள். 

சிலரின் தூண்டுதலின் பேரில் தவறாகப் பரப்புரை செய்யப்படுகிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இருமடங்கு விலை வழங்கப்படுகிறது. யாரோ துண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து வந்து இங்கு வந்து போராட்டம் நடத்துவது சரியா? நிலம் கையகப்படுத்தாமல் தொழிற்சாலையை எங்கு அமைப்பது?”” 

என வினா எழுப்பியுள்ளார்.