திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமயால், திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில்  அறிவிக்கப்பட்ட   ரூ.5 லட்சம் நிவாரணத்தை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால்,  திருவண்ணாமலையில்  மகா தீபம் ஏற்றும் மலையில் கடந்த 1ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அதில் இருந்த பாறை உருண்டு,  வஉசி நகர் எனப்படும் மலைப்பகுதியில் ஒரு விட்டின் மேல் விழுந்தது. இதனால், அந்த வீடு மற்றும்வீட்டிலிருந்த 7 பேரும் மண்ணோடு மண்ணாகினர்.  பேரிடர் மீட்பு படையினர் அவர்களை உயிருடன்  மீட்க எடுத்த நடவடிகைகள்  வெற்றிபெறவில்லை.  7 பேரும் சடலங்களாகவே மீட்கப்பட்டனர்.

இந்த விபத்தில், அங்கு குடியிருந்த   கூலித்தொழிலாளி ராஜ்குமார்(32), அவரது மனைவி மீனா(26), அவர்களது குழந்தைகள் கவுதம்(9), மகள் இனியா(7) மற்றும் உறவினர்களின் குழந்தைகளான மகா (12), ரம்யா(12), வினோதினி(14) ஆகியோர் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து,  திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்   7 பேரின குடும்பத்தினருக்கும் தலா ₹5 லட்சம் நிவாரண உதவித்தொகைக்கான ஆணையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.  மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் சார்பில் தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது,  துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாநகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், துரை வெங்கட் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.