சென்னை: காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினையில் சட்ட ரீதியாக சென்றுகொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அவசியமும் மில்லை ” என்று கூறிய அமைச்சர் துரைமுரகன் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகாமல் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட இடைக்கால மனுக்கள் மீது தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்தது. அதாவது தமிழக அரசு சார்பில் 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடக்கோரியது நிராகரிக்கப்பட்டது. மேலும், ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் 5000 கன அடி நீரை கர்நாடகம் தமிழகத்துக்கு தற்போது திறக்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடாக அரசு அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும். ஒரு கூட்டாட்சி தத்துவத்தில் உயர்ந்து நிற்பது உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவை ஓர் அரசாங்கத்தை நடத்துபவர்கள் புறக்கணிக்க முடியாது என்றவர், ஏற்கனவே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 5000 கன அடி தண்ணீரை 15 நாட்களுக்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தான் உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
ஆனால், கர்நாடக விவசாயிகள் அவர்களுக்குரிய தண்ணீரை நாம் கேட்பதாக தவறாக நினைக்கிறார்கள். காவிரி ஆற்று நீர் கர்நாடகத்துக்கு மட்டுமல்ல. கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி, அந்த மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் அதிக இடங்களில் ஓடுகிறது. ஆற்றின் கடைமடை பகுதிக்குத்தான் அதிக உரிமை உண்டு.
ஆகவே, கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளுக்கும் தண்ணீர் வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. தண்ணீர் மிகையாக இருக்கும் காலத்தில் இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் சிக்கலான நேரத்தில் காவிரியில் எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்துக்கான பங்கை கர்நாடகம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. மொத்த நீரையும் திறந்து விட கேட்கவில்லை. எங்களுக்குரிய தண்ணீரை திறந்து விட கேட்கிறோம். எனவே உத்தரவின்படி தண்ணீர் திறந்துவிட வேண்டிய கட்டாயத்தில் தற்போது கர்நாடக அரசு உள்ளது என்றார்.
இதையடுத்து காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தமிழ்நாடுஅரசு பேச்சவார்த்தை நடத்துமா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், காவிரி நீர்ப்பங்கீடு பிரச்சினையில் சட்ட ரீதியாக சென்றுகொண்டிருக்கும் போது பேச்சுவார்த்தையால் பயனில்லை. மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு அவசியமுமில்லை ” என்று கூறினார்.