சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கருணாநிதி படம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளாமல் அதிமுக புறக்கணித்தது. இதுகுறித்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் 16-வது தலைவராக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவ படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் அதிமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்து சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னாள் ஆண்ட கட்சியும், தற்போதைய எதிர்க்கட்சியுமான அதிமுக சட்டமன்ற 100வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளாது வருத்தத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கூறியதாவது:
“சட்டமன்ற விழாக்களை புறக்கணிப்பதற்கு அதிமுக கூறிய காரணங்கள் பொருத்தமற்றவை; நான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்ஸை அழைத்தேன். அவருக்கு ஜனாதிபதியுடன் மேடையில் இடமளிக்கப்படும் என்று கூறினேன், மேலும், அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால், அவர் தான் சேலம் செல்லும் வழியில் இருப்பதாகவும், கட்சி சகாக்களுடன் கலந்தாலோசித்த பிறகு தனது முடிவை தெரிவிப்பதாகவும் கூறினார். ஆனால், அவர் விழாவை புறக்கணிப்பதற்கான தனது முடிவை எனக்குத் தெரிவிப்பதற்குப் பதிலாக சட்டசபை செயலருக்கு தெரிவித்தார்.
ஏற்கனவே சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டபோது, உருவப்படம் திறக்கப்படுவது குறித்து எங்களுக்கு (திமுக) சரியாக தெரிவிக்கப்படவில்லை. மேலும், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த எங்களுக்கு முறையான அழைப்பு இல்லை. “திமுகவுக்கும் மற்றவர்களைப்போலவே அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே திமுக அந்த நிகழ்ச்சியைத் தவிர்த்தது. ஆனால், நாங்கள் இந்த முறை, அதிமுக தலைவர்களுக்கு மரியாதையாக நடத்தப்படும் என்று நாங்கள் உறுதியளித்தோம். ஆனால் அவர்கள் எங்கள் அழைப்பை புறக்கணித்தனர்.
மேகதாது அணை குறித்த கேள்விக்கு, “ யார் போராட்டம் நடத்தினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பையும் மதிக்கமாட்டோம் என்று ஒரு மாநில முதல்வரே சொல்வது ஏற்புடையது அல்ல. புதிதாக பதவிக்கு வந்த துடிப்பில் அவர் அப்படி பேசியுள்ளார், விபரம் அறிந்தவுடன் அவர் நல்ல முடிவுக்கு வருவார் என நம்புகிறேன். மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.