டெல்லி: தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான எந்த கோரிக்கையும் பரிசிலனையில் இல்லை என்று மத்தியஅரசு பாராளுமன்றத்தில் பதில் தெரிவித்து உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பாஜக சலசலப்பை உருவாக்கி வந்த கொங்குநாடு கோஷத்துக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை இரண்டாக பிரித்து, கொங்கு நாடு என தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கோவை பகுதியைச் சேர்ந்த சிலர் குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கு மாநில பாஜகவும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. திமுக அரசு, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று விளித்து கூறுவதால், அதற்கு மாற்றாக கொங்குநாடு என்ற தனி மாநில பிரச்சினையை பாஜக தூண்டி விடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், பாராளுமன்றத்தில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்தியஅரசின் உள்துறை  தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டு உள்ளது. அதில்,  தமிழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான எந்த கோரிக்கையும் மத்தியஅரசின் பரிசிலணையில் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்  கொடுத்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் பிரதிநிதித்துவங்கள் அவ்வப்போது பெறப்படுகின்றன. ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குதல், நமது நாட்டின் கூட்டாட்சி அரசியலில் நேரடி தாக்கம். ஆனால். பொருத்தமான அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுகிறது. தற்போது,  புதிய மாநிலங்கள் உருவாக்குவது தொடர்பான எந்தவொரு திட்டங்களும்  பரிசீலனையில் இல்லை என தெரிவித்து உள்ளது.

மத்தியஅரசு கொடுத்துள்ள தெளிவான பதில் காரணமாக, கொங்கு நாடு அறிவிப்பு புஷ்வானமாகி போயுள்ளது.