மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சுர்ஜித்தின் விரல் நீண்ட நேரத்திற்கு பின் வெளியே தெரிந்ததை, அமைச்சர் விஜயபாஸ்கரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் மானிட்டர் மூலமாக பார்வையிட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித்தை மீட்க 2 மீட்டர் தொலைவில், 90 அடி ஆழத்திற்கு புதிய குழி ஒன்று தோண்டப்பட்டு, பின்னர் பக்கவாட்டில் குழி தோண்டி மீட்க அதிகாரிகள் முடிவெடுத்த நிலையில், இதற்காக பிரத்யேகமாக ரிக் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் 45 அடிக்கு மேல் ரிக் இயந்திரத்தால் துளையிட முடியாத காரணத்தால், போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணி தற்போது முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சிறுவன் சுர்ஜித்தின் விரல் நீண்ட நேரத்திற்கு பிறகு தற்போது வெளியே தெரிந்ததாக அதிகாரிகள் கூறிய நிலையில், அதை அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் சுவராசு ஆகியோர் மானிட்டர் மூலம் பார்வையிட்டனர்.