சென்னை
கிறித்துவப் பள்ளியில் மாணவர்கள் மதம் மாற அழுத்தம் அளிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மதமாற்றம் செய்யப் பள்ளியில் அளித்த அழுத்தம் காரணமாகத் தமிழக மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகின. அவருடைய பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறை சார்பில் இவ்வாறு பள்ளி நிர்வாகம் அழுத்தம் அளிக்கவில்லை எனத் தெரிவித்ததால் மாணவியின் குடும்பத்தினர் கோபம் அடைந்தனர்,
மரணம் அடைந்த மாணவியை மதமாற்றத்துக்கு வற்புறுத்தியது மட்டுமின்றி அவர் தங்கி இருந்த விடுதியில் கழிவறை சுத்தம் செய்யவும் பாத்திரங்களைக் கழுவவும் சொல்லி தொந்தரவு செய்துள்ளதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர். மரணம் அடைந்த மாணவியின் உடலை வாங்க மறுத்த பெற்றோருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உடலைப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தியது.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி ஒரு பேட்டியில், “நாங்கள் அந்த கிறித்துவ பள்ளியில் பயிலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளோம். அந்த கிறித்துவ பள்ளியில் மதம் மாற யாருக்கும் அழுத்தம் அளிக்கவில்லை என்பதை இந்த மாணவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள ஏராளமான இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் அங்குக் கல்வி பயில்கின்றனர் என்பதும் அவர்களில் யாருக்கும் மதம் மாற பள்ளி நிர்வாகம் அழுத்தம் அளிக்கவில்லை என்பதே உண்மையாகும். இந்த பகுதியில் உள்ள கிறித்துவப் பள்ளிகள் அனைத்தும் கல்விக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.