சென்னை: தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டுக்கான 10, 11, 12வது வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் பள்ளிகள் திறப்பு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டு உள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கோடை விடுமுறைக்குபின் பள்ளி திறப்பு தேதி, வரும் கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை வெளியிட்டார்.
அதன்படி, 1முதல் 10ம் வகுப்புவரையிலான பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ந்தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜுன் 20ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று கூறினார்.
அதுபோல் வரும் கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023ம் ஆண்டு மார்ச் 13ந்தேதி தொடங்கும் என்றும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023ம் ஆண்டு மார்ச் 14ல் தொடங்கும் என்றும்,. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2023ம் ஆண்டு ஏப்ரல் 3ல் தொடக்கும் என்றும் அறிவித்தார்.
அது மட்டுமல்லாமல், வரும் கல்வியாண்டிலிருந்து கொரோனா கால அட்டவணை போல அல்லாமல், வழக்கம் போல பள்ளிகள் செயல்படத் தொடங்கும் என்ற முக்கிய அறிவிப்பினையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பள்ளிகள் கடந்த ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் செயல்பட்டதால், மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், வரும் கல்வியாண்டில் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.