சென்னை
தமிழகத்தில் கடுமையாக வெயில் அதிகரித்துள்ளதால் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (மே 16, 17) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
நேற்று 17 தமிழக நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி, திருத்தணியில் 106, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கரூர் பரமத்தியில் தலா 105, பரங்கிப்பேட்டையில் 104, ஈரோடு, மதுரை விமான நிலையம், திருச்சி, புதுச்சேரி, கடலூரில் தலா 103, தஞ்சாவூர், பாளையங்கோட்டையில் தலா 102, காரைக்கால், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,
“தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்தவும். இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணவேண்டும். காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்க வேண்டும். உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.”
என அறிவுறுத்தி உள்ளார்.