சென்னை

மிழக அமைச்சர் கே என் நேரு மழைநீர் வடிகால்களால் தான் தண்ணீர் வேகமாக வடிந்ததாக கூறி உள்ளார்.

இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம்,

”சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை கூட மழை பதிவாகியுள்ளது. ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. பெரு மழைக்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ தூர மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்

மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறுகிய காலத்தில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தில் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டு வருகிறது. 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தியுள்ளனர். 70 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு சுமார் 4.75 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழையால் சுரங்கப் பாதையில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த முறை பாதிப்பை ஏற்படுத்திய வேளச்சேரி, நாராயணபுரம் ஏரிகளில் இம்முறை பாதிப்பு இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனர். தமிழக அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.”

என்று கூறியுள்ளார்.