கோவை: கோயம்புத்தூரைச் சேர்ந்த சிறுதுளி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், நகரத்தில் எஸ்பிபி வனம் என்ற பெயரில், மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை கவுரவிக்கும் வகையிர் ஒரு மினி காட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான மரம்நடுவிழா, கலாமின் பிறந்தநாளான நேற்று நடைபெற்றது.
இந்த காட்டில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 74 புகழ்பெற்ற ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் 74 மரங்களைக் கொண்டிருக்கும் என்றும், ஒவ்வொரு மரத்திலும் SPB பாடிய பிரபலமான பாடலின் பெயர் இருக்கும் என்றும் சிறுதுளி அமைப்பினர் தெரிவித்து உள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் கடந்த ஆகஸ்டு 5ந்தேதி கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, ஆகஸ்ட் 13 இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது, ஆனால் இறுதியில் அவர் குணமடைந்தார். ஆனால், அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதினால், கடந்த செப்டம்பர் 25 அன்று அவர் நுரையீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல், சென்னைக்கு அருகிலுள்ள ரெட் ஹில்ஸ் தாமரைபாக்கம் பண்ணை இல்லத்தில் முழு மாநில அரசு மரியாதைகளுடன் அவர் அடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபியின் மறைவு இசை உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பாடகர்கள் மற்றும் ரசிகர்கள் இன்றும், எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையைச்சேர்ந்த சிறுதுளி தன்னார்வ அமைப்பினர், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் மற்றும் இந்திய திரைப்பட சகோதரத்துவத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்டாடுவதற்காக கோயம்புத்தூர் நகரில் மினி காடு ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாளை ஒட்டி, சிறுதுளி அமைப்பு சாா்பில் ஆண்டுதோறும் மரக் கன்றுகள் நடுவது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று அப்துல் கலாம் பிறந்தநாளோடு, மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை சிறுதுளி அமைப்பின் வளாகத்தில் 74 மரங்கள் அடங்கிய நகா்ப்புற வனத்தை உருவாக்க திட்டமிட்டனர். அதன்படி, அந்த காட்டுக்கு எஸ்பிபி வனம் என பெயரிட்டு, அதில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
எஸ்பிபியின் 74வயது குறிக்கும் வகையிலும், அவரை நினைவுகூரும் வகையிலும், இசைக் கருவிகளை உருவாக்க பயன்படுத்தப்படும் வேம்பு, மஹோகனி, சில்வா் ஓக், சந்தனம், தேக்கு, வேங்கை, புன்னை, கருங்காலி, பண்ருட்டி பலா, மா மரம், மூங்கில் உள்ளிட்ட மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மரத்துக்கும் எஸ்.பி.பி. பாடிய பிரபல பாடல்களின் வரிகள் பெயா்களாக சூட்டப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு மிகு நிகழ்ச்சியில், எஸ்.பி.பி. வனத்தினை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் அவரது சகோதரி எஸ்.பி.சைலஜா ஆகியோா் காணொலி வழியாக தொடங்கிவைத்தனா். மேலும் இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான், பாடகா் ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் காணொலி வழியாக பங்குகொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் சிறுதுளியின் நிா்வாக அறங்காவலா் வனிதா மோகன், சுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளா் சரவணன், சிறுதுளிஅறங்காவலா்கள், தன்னாா்வலா்கள், பாடகா்கள், இசைக் கலைஞா்கள் பங்கேற்றனா். எஸ்பிபி வனமின் இருப்பிடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.