தூத்துக்குடி: அதிகாரிகள் சீல் வைத்த குடோனில் இருந்து தாது மணல் கடத்தப்பட்ட விவகாரத்தில் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், லாரி டிரைவர்கள் 5 பேரை கைது செய்தனர். சுமார் 40 டன் தாதுமணல் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தென் தமிழக கடற்கரையில் இல்மினெட் உள்ளிட்ட தாது மணல் அதிக அளவில் கிடைக்கிறது. அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் திசையன்விளையை சேர்ந்த வைகுண்டராஜனின் வி.வி.மினரல் நிறுவனமும் அது சார்ந்த தொழிலில் அவரது உறவினர்களின் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
தூத்தூக்குடி மாவட்டம் கடற்மண்ணில் தாலு மணல் உள்ளது. இதை பிரிந்தெடுக்கும் பல நிறுவனங்கள் உள்ளன. இதில் முக்கியமான இரண்டு நிறுவனங்களில் வைகுண்டராஜனுக்கு சொந்தமான விவி மினரல்ஸ், மற்றொரு காங்கிரஸ் நிர்வாகி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு சொந்தமான நிறுவனங்கள். இதில் வைகுண்டராஜினின் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு புகார்களில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது.
தாதுமணல் எடுப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, கடந்த 2013ம் ஆண்டு தாது மணலை எடுக்க மத்திய அரசு தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, கடல் மண்ணில் இருந்து தாது மணலை பிரித்து எடுக்கவோ, பதுக்கி வைக்கவோ, ஏற்றுமதி செய்யவோ தமிழக அரசும் தடை விதித்துள்ளது. இருந்தாலும் அரசியல் செல்வாக்கு காரணமாக, அங்குள்ள நிறுவனங்கள், தாதுமணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின்பேரில், கடந்த 2017ம் ஆண்டு விவி மினரல்ஸ்க்கு சொந்த இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வி.வி.மினரல், பி.எம்.சி., ஐ.எம்.சி. உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் சோதனை மேற்கொண்டர். அப்போது கார்னைட், இல்மனைட், ஜிர்கான் மற்றும் ரூட்டைல் ஆகிய தாது மணல்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மொத்தம் 3 லட்சத்து 13 ஆயிரத்து 981 டன் தாது மணல் இருப்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டு, வி.வி. மினரல்ஸ்க்கு சொந்த 19 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட குடோனில் இருந்து தாது மணல் எடுத்துச்செல்லப்படுவதாக புகார்கள் எழுந்தன. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள வி.வி. டைட்டானியம் பிக்மென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து, தாது மணல் கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், லாரியில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 9 டன் தாது மணலையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 5 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். பல கோடி மதிப்பிலான 40 டன் தாதுமணலை போலீசார் பறிமுதல் செய்து லாரியை சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தாசில்தார் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள் உள்பட துறை அதிகாரிகள் விவி டைட்டானியம் நிறுவனத்தின் உள்ளே சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சட்டத்திற்குப் புறம்பாக தொ்மல் நகா் பகுதியில் உள்ள விவி குடோனில் இருந்து தாது மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த பகுதியான மீளவிட்டான் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கன்னா அளித்த புகாரில், விவி மினரல்ஸ் உரிமையாளர் மற்றும் 5 லாரி டிரைவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் மீது நான்கு பிரிவுகளில் ( 448, 379, 420, 24(4) ) வழக்கு பதிவு செய்து லாரி டிரைவா்கள் 5 பேரை கைது செய்தனர். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.