சென்னை:

பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும், பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டன விதிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக  தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி இருந்தார். தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயனக் கலப்படம் உள்ளதாக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து,   ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் ஆகிய பால் நிறுவனங்கள் சார்பில் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தது. அmதுபோல வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணைகளின்போது, கலப்பட பால் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. அப்போது,   ஒருசில தனியார் நிறுவனங்களின் பால், தரமற்று இருந்ததாகவும், அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பால் கலப்பட வழக்கு இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பால் கலப்பட வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி இல்லை என்றும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் கேடுக்கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பால் கலப்படம் செய்தால் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், பால் கலப்படத்தில் ஈடுபவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது.  உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான பாலில் கலப்படம் செய்வது ஆரோக்கியத்திற்கு விடுக்கப்படும் மிரட்டல், மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது  என்றும்,  பால் கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் இது வரை பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் என்ன?  வசூலிக்கப்பட்ட அபராதங்கள் எவ்வளவு என்பது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும்,  இந்த வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லையென்றால் தமிழக சுகாதார செயலாளரை நேரில் ஆஜராகக் கூடிய நிலை உருவாகும் என்று எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.