சென்னை: சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மக்களுக்கு தடையின்றி பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் படகு மூலம் பால் விநியோகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளங்கள் நிரம்பி, உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் கனமழை காரணமாக சென்னையில் சாலைகளில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு, வேறு இடங்களிலும் முகாம்களிலும் தங்கி வருகின்றனர். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்டு உள்ளதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி யளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது. பல பகுதிகளில் மின்சாரமும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் மக்களுக்கு பால் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பதனிடும் தொழிற்சாலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், கடந்த காலங்களில் பால் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதுபோல, இந்த முறை அதிக விலைக்கு பால் விற்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் பால் கிடைக்காவிட்டாலும், பால் கிடைக்காதது குறித்து எந்த நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டாலும், ‘வார் ரூம்’ மூலமாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பால் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். மழை வெள்ளம் தேங்கியுள்ள இடங்களிலும், சிறு படகுகள் மூலம் நேரடியாக பால் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் நாசர் கூறினார்.