டெல்லி:

தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் பால் கலப்படம் அதிகளவில் நடப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆணையத்தின் தலைவர் ஆசிஷ் பகுகுனா கூறுகையில், ‘‘பால் கலப்படத்தை எதிர்கொள்ள வசதியாக பால் தரத்தை சோதனையிடும் ரெகுலேட்டர் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இதை மொத்தமாக முதலீடு செய்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஏற்ற முதலீட்டாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘பால் கலப்படத்தை தடுக்கும் காரணிகளை அதிகரிக்கும் வகையில் மேலும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் பால் கலப்படம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக 2 ஆயிரத்து மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு சில மாநிலங்களில் கலப்படமே இல்லை. இதை நம்பமுடியவில்லை. இருந்தாலும் இன்னொரு முறை ஆய்வு நடத்தப்படும்’’ என்றார்.

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உத்தரவின் பேரில் பால் கலப்படம் தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. பால் கலப்படத்தை அறியும் கருவியை மக்கள் வாங்கும் வகையில் ரூ. 15 முதல் 20 ரூபாய் கட்டணத்தில் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.