டில்லி
மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் பயணம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் தாங்கள் தற்போதுள்ள மாநிலங்களில் சிக்கி சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதையொட்டி மும்பை, சூரத் போன்ற இடங்களில் போராட்டங்கள் நிகழ்ந்தன.
இன்று இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதில்,
”ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், யாத்திரிகர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் பலர் ஒரே இடத்தில் சிக்கி தங்கள் ஊருக்கு செல்லமுடியாமல் உள்ளனர். அவர்கள் கீழே கண்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பயணம் செய்யலாம்.
மாநிலம் விட்டு மாநிலம் செல்வோர் தாங்கள் தங்கி இருக்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளின் அனுமதியுடன் பயணம் செய்யலாம். இதற்கான அதிகாரிகளை அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேச அரசு எஇயமிக்க வேண்டும்.
வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் ஒரு குழுவாகச் செல்ல விரும்பினால் அனுப்பும் மாநிலம் மற்றும் போய்ச் சேரும் மாநிலம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்தாலோசித்து சாலை வழிப் போக்குவரத்துக்கு இரு மாநிலங்களும் அனுமதி அளித்தால் மட்டுமே பயணம் செய்யலாம்
பயணம் செய்வோர் சோதிக்கப்பட்டு எவ்வித அறிகுறிகளும் இல்லாதோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
குழுவாக பயணம் செய்யப் பயன்படுத்தப்படும் பேருந்துகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும். பேருந்தில் அமர்வோர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
இந்த பேருந்து செல்லும் வழியில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த பயணத்துக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும்.
போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைந்ததும் அந்த பகுதி சுகாதார அதிகாரிகள் இவர்களைச் சோதித்து வீட்டு தனிமையில் வைக்க வேண்டும். தேவைப்படுவோரை தனிமை வார்டுகளில் வைக்கவும் இந்த அதிகாரிகள் முடிவு செய்யலாம். இவ்வாறு தனிமைப்படுத்தப் படுவோரை ஆரோக்கிய சேது செயலியின் மூலம் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.”
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.