மும்பை

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தனது கால்நடைகளை விற்று விமான டிக்கட் வாங்கி அந்த விமானம் ரத்தானதால் துயரம் அடைந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சோனா முல்லா என்னும் புலம்பெயர் தொழிலாளி கடந்த  2 மாதங்களாக மும்பையில் ஊரடங்கால் சிக்கி இருந்தார்.   அவருக்கு ஊதியம் இல்லாததால் அவரால் தனது சொந்த செலவுகள் மற்றும் வீட்டுச் செலவுகளுக்குப் பணம் ஏற்பாடு செய்வதில் மிகவும் சிரமம் அடைந்தார்.   அவருடன் மேலும் இருவரும் மும்பையில் சிக்கி இருந்தனர்.

அவர் தனது சொந்த ஊர் திரும்ப ரயில் டிக்கட்டுகள் வாங்க முயன்றும் முடியாத நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் உள்நாட்டு  விமானச் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இவர்கள் மூவரும் இணைந்து மும்பையில் இருந்து கொல்கத்தா செல்ல டிக்கட் புக் செய்துவிட்டு திங்கள்கிழமை அன்று 2000 ரூபாய் டாக்சிக்கு செலவு செய்து விமான நிலையம் சென்றனர்.

இதற்குப் பணம் இல்லாததால் சோனா முல்லாவின் குடும்பத்தினர் தங்களிடம் இருந்த கால்நடைகளை விற்று இவருக்குப் பணம் அனுப்பி அந்த பணத்தில் விமான டிக்கட் வாங்கி உள்ளார்.   ஆனால் மேற்கு வங்கத்தில் விமானச் சேவை தொடங்காததால் அன்று கொல்கத்தா விமானம் ரத்து செய்யப்பட்டது.

எனவே இந்த பணம் ரூ.10200 ஐ திரும்ப அளிக்குமாறு சோனா முல்லா விமான நிறுவன ஊழியரிடம் கெஞ்சி  உள்ளார்.   ஆனால் ஊழியர் அந்த பணத்தைத் திருப்பி அளிக்க முடியாது என அறிவித்ததால் சோனா மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.  இவரைப் போல் பலர் விமானச் சேவை திடீர் ரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது