குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக நாளை நடத்தும் பேரணிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு, பல கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, அது சட்டமாக்கப்பட்டது. இச்சட்டத்தின் படி, குறிப்பிட்ட 6 மதங்களை சேர்ந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதோடு, இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்றவும் பல ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு, பல மாநிலங்களில் வன்முறைகளும் வெடித்துள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் நாளை திமுக தரப்பில் இச்சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேரணிக்கு சென்னை காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பேரணிக்கு தடை விதிக்க கோரி இந்திய மக்கள் மன்றத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை அவசர வழக்காக ஏற்று இரவு 8.30க்கு விசாரணையை தொடங்கிய நீதிமன்றம், திமுக நடத்தும் பேரணிக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்பதை முதலில் மனுதாரர் தரப்பில் கேட்டறிந்தனர்.

இவ்வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதால், பேரணியை நடத்த தடை விதிக்கலாம் என்று வாதிட்டார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “பொதுச்சொத்திற்கு சேதம், அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது காவல்துறை தரப்பில் அனுமதி மறுப்பு என்கிறீர்கள். இம்மனு தாக்கல் செய்த பிறகு மறுக்கப்பட்டதா ? இல்லை, அதற்கு முன்பாகவே மறுக்கப்பட்டதா ?” என்று கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், உருவபொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு செய்யமாட்டோம் என திமுக எந்த வாக்குறுதியையும் காவல்துறைக்கு அளிக்கவில்லை. அதனால் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இம்மனு தாக்கலான பின்னரே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், “எந்தெந்த கட்சிகள் இதில் பங்கேற்க உள்ளன ? தனித்தனியாக அவர்கள் அனுமதி கேட்டுள்ளார்களா ?” என்று கேள்வி எழுப்ப, திமுக மட்டுமே இப்பேரணியை ஒருங்கிணைப்பதால், திமுக தரப்பில் மட்டுமே அனுமதி கோரப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அவ்வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்பாட்டம் போன்றவைகளை யாராலும் தடுக்க முடியாது. விதிமுறைகளை பின்பற்றி யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். விதிமுறைகளை பின்பற்றவேண்டியது கட்சிகளின் கடமை. காவல்துறையின் நிபந்தனைகளை திமுக ஏற்றால், பேரணிக்கு அனுமதி அளிக்கப்படுமா ? என்று மீண்டும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, ”காவல்துறையின் எந்த நிபந்தனையையும் பூர்த்தி செய்யும் வண்ணம் திமுக விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பித்தால் பரிசீலிப்போம்” என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இடைக்கால உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக பேரணி நடத்த தடை இல்லை. நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுகவின் பேரணியில் சட்டம் ஒழுங்கை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பேரணி நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தனர்.

அத்தோடு ட்ரோன் கேமரா மூலம் பேரணியை வீடியோவாக படுமெடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நிபந்தனைகளை மீறிய போராட்டத்தை வீடியோ பதிவு செய்தால் அது முக்கியமான சாட்சியமாக இருக்கும் என்றும், பேரணியில் விதிமீறல் ஏற்படாமல் கண்காணிக்க அரசு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், காவல்துறை அனுமதி அளிக்காத பட்சத்தில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றால், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.