டில்லி

நாளை முதல் ஜூலை 31 வரை கடைப்பிடிக்க வேண்டிய புதிய கொரோனா வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.  ஆயினும் மூன்றாம் அலை கொரோனா  பாதிப்பு விரைவில் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதையொட்டி அரசு பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.  இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தலைமைச் செயலர் ஆஜய் பல்லா கொரோனா வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய கொரோனா வழிமுறைகளை நாளை முதல் ஜூலை 31 வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  இந்த ஐந்து அடுக்கு கொள்கையில் பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி அளித்தல், மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவை உள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் சிறு சிறு மண்டலங்கள் உருவாக்கி அங்குச் சோதனை மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பு தொடக்கத்திலேயே கண்டறியப்படும் எனவும் அது மேலும் பரவுவதை உடனடியாக தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் இந்த பரவல் எண்ணிக்கையைப் பொறுத்து மருத்துவமனை படுக்கை வசதிகள் அதிகரித்தல் போன்ற பல நடவடிக்கைகளை முன் கூட்டியே நடத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.