டில்லி

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  நேற்று வரை இந்தியாவில் 3.04 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2.95 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 5.04 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.,

விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.  இதையொட்டி நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.   அரசு சார்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடக்கூடாது எனக் கூறப்பட்டது.   ஆனால் இந்திய மருத்துவ சங்கம் ஆய்வு நடத்தி கர்ப்பம் தரித்த பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள பரிந்துரைத்தது.  அதன் அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.    இனி கர்ப்பிணிப் பெண்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தோ அல்லது நேரடியாக முகாம்களுக்கு சென்றோ தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.