கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த பாதிப்பு பலநூறு ஆண்டுகள் ஆனாலும் மாறாத வடுவாக மாறிப்போயுள்ளது.
அந்த சமயத்தில் நாட்டு மக்களுக்கு உதவ மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த புள்ளிவிவரங்கள் அதன் 2020 – 21 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முதல் கட்டமாக 2020 மார்ச் 24ம் தேதி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது பல்வேறு மாநிலங்களில் அதற்கு முன்பே ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது, அதன் காரணமாக அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஏழாக இருந்த உதவி மைய்ய இணைப்புகள் பின்னர் 66 இணைப்புகளாக உயர்த்தப்பட்டது இதில் 15 எண்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் அவசர உதவிக்காக பிரத்யேகமாக செயல்பட்டது.
மார்ச் 25 முதல் 31 டிசம்பர் 2020 வரை உள்துறை அமைச்சகத்தின் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 13,034 அழைப்புகள் வந்துள்ளது அதில் 11,377 அழைப்புகள் உணவு மற்றும் உறைவிடம் குறித்த அழைப்புகள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் தேவை குறித்து 854 அழைப்புகளும், 129 அழைப்புகள் வட கிழக்கு மாநிலத்தவரின் கோரிக்கைகள் அடங்கியதாகவும் 742 அழைப்புகள் இதர கோரிக்கைகள் குறித்ததாகவும் இருந்தது.
அவசர உதவி கேட்டு ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 600 அழைப்புகள் வந்த நிலையில் 2020 மே மாத இறுதியில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறையத் தொடங்கியுள்ளது.
மாநில அரசுகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஷ்ரமிக் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ரயில்களில் சொந்த ஊர்ருக்குச் செல்ல புலம் பெயர் தொழிலாளர்கள் மேற்கொண்ட அழைப்புகள் மட்டும் 32,986.
போக்குவரத்து முடங்கியதால் ஆங்காங்கே சிக்கித் தவித்த 2,95,327 பேர் இந்த சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்குச் சென்றனர். அதில் 2,71,219 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள், 5,388 பேர் மாணவர்கள், 1,539 பேர் சுற்றுலா பயணிகள் தவிர மற்ற பயணிகள் 17,052 பேர் அடங்குவர்.
வெளிமாநில மற்றும் புகலிடம் இல்லாத மக்களின் தேவைக்காக மாநில அரசுகளின் மூலம் சுமார் 41,000 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது, அவற்றில் சுமார் 14 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும், 30,000 இடங்களில் உணவு கூடங்கள் அமைத்து உணவு வழங்கப்பட்டது. இது தவிர, சுமார் 17 லட்சம் தொழிலாளர்கள் அவர்கள் வேலை செய்யும் இடங்களிலேயே தங்க வைக்கப்பட்டு உணவளிக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.