சென்னை:  தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த  எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, அதிமுகவினர் கொண்டாடி மகிழும் நிலையில்,  பிரதமர் மோடி, முன்னாள் அதிமுக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர்  விஜய்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்  என பிரதமர் மோடியும்,  தீய சக்தியின் ஆட்சியில் இருள் சூழ்ந்த தமிழகத்தை மீட்டெடுத்த எம்.ஜி.ஆரை போற்றுவோம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். அதுபோல, ஜனநாயகப் பாதையில் சாமானியர்களுக்கும் அதிகாரமளித்த எம்.ஜி.ஆருக்கு புகழ் வணக்கம் என தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டி உள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்த நாள் இன்று கொண்டாப்படுகிறது. அதையொட்டி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள், உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களின் 109-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர்  எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் அதிமுகவினர் மரியாதை செய்தனர். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

பிரதமர் மோடி

எம்ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதிலும் அவரது பங்கு அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும்  பாடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/i/status/2012377537322860696

எடப்பாடி பழனிச்சாமி

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, “ ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்.

அஇஅதிமுக எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவராம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்கி, தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.

‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் ‘பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்..

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் #என்றும்_எங்கள்_வாத்தியார்MGR அவர்களின் பிறந்தநாள்! தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க, அதிமுக  எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம், திரை ஆளுமையாக தத்துவங்களையும், முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும் அள்ளித் தந்த பொன்மனச் செம்மல், இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்தநாளில், புரட்சித் தலைவர் அவர்கள் கூறிய மக்களாட்சியை, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி,   தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்! வாழ்க புரட்சித்தலைவர் நாமம்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!

அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “தமிழக மக்களின் நெஞ்சங்களில் பொன்மனச் செம்மலாக, ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக, பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]