சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், தீய சக்திகளைத் தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
அதிமுக நிறுவனத் தலைவா், முன்னாள் முதல்வா் மற்றும் நடிகர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாள் விழாவை அதிமுக தொண்டா்கள், நிா்வாகிகள் எம்.ஜி.ஆரின் சிலை, உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தனது தனது கிரீன்வேஸ் இல்லத்தில், எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். இதையடுத்து எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 107 கிலோ பிரமாண்ட கேக்கை வெட்டி, எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு வழங்கினார்.
எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர், கடையேழு வள்ளல்கள் குறித்தும், மகாபாரத இதிகாசம் சொல்கிற வள்ளல் கர்ணன் குறித்தும் நாம் கதைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம்.ஆனால், அவர்களின் வள்ளல் தன்மை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று, மக்கள் தாங்கள் வாழ்கிற காலத்தில் ஒரு தெய்வத்தை தரிசித்தார்கள் என்றால் அது நமது பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களைத்தான், ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித் தலைவரின் ஆட்சியில்தான். அவர்கள் குடில்களில் மின்சார விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில்தான்.
புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் தீய சக்திகளைத் தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூளுரை ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். புரட்சித் தலைவரின் பெரும் புகழ் இன்னும் பல்கிப் பெருகி வளரும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அவர் மக்கள் உள்ளங்களில் மாமனிதராய், மனிதருள் மாணிக்கமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.