சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-சும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் வருகிற இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அதிமுக அலுவலகம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அவரது உருவப்படம் ஆங்காங்கே அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே எம்ஜிஆரின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மெரினா கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிய உள்ளனர். இதனால் எம்ஜிஆர் நினைவிடம் செல்லும் மக்களின் எண்ணிக்கை இன்று அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் அங்கு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்த முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்டப முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி அதிமுக தலைமை அலுவலகம் வாழை மரங்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஓ பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் ஆகியோரும் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்த உள்ளனர். சசிகலா, சென்னை திநகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாளை முன்ன்னிடு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106-வது பிறந்தநாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், தனது கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும் வானளவு உயர்ந்து, நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து, பொதுவாழ்க்கையில் முதலமைச்சராக பல சரித்திர திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் மனதில் நீங்காது வாழும் புரட்சித்தலைவர் #MGR அவர்களின் 106-வது பிறந்தநாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.