எம்ஜிஆர், லயோலா, சத்துணவு. சிவாஜி,பத்தாயிரம்…
சிறப்புக் கட்டுரை ஏழுமலை வெங்கடேசன்..
சத்துணவு என்றாலே எம்ஜிஆரும் அவர் வறுமையால் வாடியபோது பட்ட துன்பத்தினால் என்பதும் நினைவுக்கு வரும்.
முதலமைச்சராகி 1982ல் சத்துணவுத் திட்டம் கொண்டுவரும் முன்பு வெவ்வேறு கட்டங்களில் வெற்றுவயிறுடன் கல்வி கற்கும் பலரின் அனுபவங்களைக் கண்டிருக்கிறார். அது தொடர்பான மன ஓட்டம் அவரை விட்டுவிலகவேயில்லை.
பள்ளி மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். சத்துணவு போட்டது எல்லோரும் அறிவோம்.
முதல்-அமைச்சராக வருவதற்கு முன்பே அவர், கல்லூரி மாணவர்களுக்கு ‘சத்துணவு’’ வழங்க ஏற்பாடு செய்த கதை தெரியுமா?
தெரிந்து கொள்வோம்.
1973 ஆம் ஆண்டு. ஜே.சி.டி.பிரபாகர் என்பவர், அப்போது சென்னை லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.
கல்லூரி மாணவர் பேரவை செயலாளர் தேர்தலில் வென்று, மாணவர்களின் தனிப்பட்ட தேவைகளையும் கவனித்து வந்தார்.
கல்லூரியில் அவருடன் படிக்கும் சக மாணவர்’’ நான் தாம்பரத்தில் இருந்து தினமும் கல்லூரிக்கு வருகிறேன். என் அம்மா வீட்டு வேலை செய்து என்னைப் படிக்க வைக்கிறார். நான் மதியம் சாப்பிடுவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா?’’ என்று கேட்க விக்கித்து போகிறார், பிரபாகர்.
கொஞ்சம் கொஞ்சமாக விசாரித்துப் பார்த்ததில் அந்த மாணவரைப்போலவே, மேலும் 15 பேர் மதிய உணவு அருந்தாமல் கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது.
கல்லூரி மாணவர் பேரவை செயலாளர் என்ற வகையில், அந்த மாணவர்களுக்கு ‘மதிய உணவு’’ அளிக்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டார் பிரபாகர்.
மாணவர்களுக்கு உணவு அளிக்கக் கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துப் போராடிக்கொண்டிருப்பதை, நிதி திரட்டி அதனைச் செயல்படுத்த முனைந்தார். நட்சத்திர கலை விழா நடத்தி மாணவர்களுக்கு ‘மதிய உணவு அளிக்கும் திட்டத்தை’ செயல் படுத்தினால் என்னவென்று தோன்றியது பிரபாகருக்கு
முதலில் அவர் அணுகியது, எம்.ஜி.ஆரைத்தான்.
சினிமாவை தாண்டி அ.தி.மு.க.வை ஆரம்பித்து, கட்சி பணிகளில் எம்.ஜி.ஆர் அப்போது முழு வீச்சில் ஈடுபட்டிருந்த நேரம். மாம்பலம் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். இருக்கும் தகவல் கேள்விப் பட்டு, லயோலா கல்லூரி மாணவர்களோடு பிரபாகர் சென்றார்
‘’தலைவர் ‘பிஸி’ யாக இருக்கிறார்.’’ என்று ஆபீசில் உள்ளவர்கள் சொல்ல-, அங்கிருந்த ‘டேப் பக்தன்’ என்ற எம்.ஜி.ஆர். ரசிகர் ‘’ தலைவர் மேல் அறையில் இருக்கிறார். மாணவர்கள் என்றால் கண்டிப்பாகச் சந்திப்பார்.. சும்மா கதவைத் தட்டுங்கள் ‘’ என்று ‘வழிகாட்டி’’ யுள்ளார்.
அது, சாப்பாட்டு வேளை. எம்.ஜி.ஆர். உணவு அருந்தி முடித்ததும், அவரது அறைக்கதவைத் தட்டியுள்ளனர்.
கதவைத் திறந்தவர் எம்.ஜி.ஆரின் உதவியாளர் முத்து. மாணவர்கள்,’’ நாங்கள் லயோலா கல்லூரியில் இருந்து வருகிறோம்’’’ என்று விவரம் சொல்ல, இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டது. பார்த்து பேச அனுமதி கிடைத்தது.
எம்.ஜி.ஆரை சந்தித்த மாணவர்கள், தங்கள் கல்லூரியில், செயல் படுத்த இருக்கும் ‘மதிய உணவுத் திட்டம் ‘ குறித்தும், இதற்கு நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா நடத்துவது பற்றியும் கூறினர்.
விழா நடத்தப்படும் தேதியைக் கேட்டார்.‘’ அக்டோபர் 22 ஆம் தேதி’’- கோரசாக மாணவர்கள் சொல்கிறார்கள். இடத்தை கேட்டபோது‘’ சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் என பதில் வந்தது.
மாணவ சமுதாயத்துக்காக அதுவும் மாணவர்களின் வயிற்றுப்பசியைத் தீர்க்கும் நட்சத்திர கலை நிகழ்ச்சி என்பதால் நிச்சயம் வருகிறேன் என்று எம்.ஜி.ஆர். அந்த இடத்திலேயே, ஒப்புதல் கொடுத்து விட்டார்.
விழா நடக்கவுள்ள அக்டோபர் 22 ஆம் தேதி நெருங்கியது.
நட்சத்திர விழாவுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் தடபுடலாகச் செய்து கொண்டிருக்க, தென்னகம்’ பத்திரிகையில் வந்த ஒரு செய்தி, மாணவர்களை தூக்கிவாரி போடச்செய்தது.
எம்.ஜி.ஆர் வெளியூர் சென்றுள்ளதால் லயோலா கல்லூரி நிகழ்ச்சிக்கு வரமாட்டார் – இது தான் செய்தி.
அதிர்ந்து போனார்கள் மாணவர்கள்.
விவரம் சேகரித்தபோது எம்.ஜி.ஆர்.படப்பிடிப்புக்கு ஷிமோகா சென்றிருப்பது தெரிய வந்தது.
ஷிமோகாவில் அவர் தங்கி இருந்த இருப்பிடத்தின் டெலிபோன் நம்பர் வாங்கி, ஜேசி.டி.பிரபாகர் பேசினார். எம்.ஜி.ஆரே லைனில் வந்தார்.
பதறிக்கொண்டே தென்னகத்தில் வந்திருக்கும் செய்தி குறித்து சொன்னார்.
நான் தானே தேதி கொடுத்தேன். ஆறு மணிக்கு வரவேண்டும் என்று சொன்னீர்கள். ஆறு மணிக்கு பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வருவேன்’
எம்.ஜி.ஆரின் பதிலைக் கேட்ட பிறகு தான் மாணவர்களுக்கு உயிர் வந்தது.
22 ஆம் தேதி. சரியாக 6 மணிக்கு விழா மண்டபத்துக்குள் நுழைந்தார், எம்.ஜி.ஆர்.
மாணவர்கள் திட்டத்தைப் பாராட்டிப் பேசினார்.
நட்சத்திர விழாவில் கலந்து கொண்டதோடு மட்டுமின்றி, அதற்கு முன்னரே 10 ஆயிரம் ரூபாயை ‘’ மாணவர் உணவு நிதி;க்கு முதல் ஆளாக அவர் வழங்கி இருந்தார்.
அவர் வழங்கிய நிதியோடு, சத்துணவுத் திட்டத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்த அந்த திட்டத்துக்கு மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் சேர்ந்திருந்தது.
அதனை வைப்பு நிதியாக வைத்து 16 மாணவர்களுக்கு உணவு அளிக்கும் திட்டத்தின், மையப்புள்ளியாக இருந்தவர், எம்.ஜி.ஆர். தான்.
இங்கே இன்னொரு சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு.
நட்சத்திர கலை விழா என்பதால் எம்ஜிஆரோடு நடிகர் திலகம் சிவாஜி உட்பட ஏராளமான ஸ்டார்கள் கலந்துகொண்டனர்.
நடிகர் சங்க விதிப்படி, நட்சத்திர கலை விழா என்றால் அதனை நடத்துபவர்கள் நடிகர் சங்கத்தில் பத்தாயிரம் ரூபாயைக் கட்டி அனுமதி வாங்கவேண்டும்.
அதன்படி நிதி திரட்டி நடிகர் சங்கத்தலைவராக இருக்கும் சிவாஜியிடம் செக் காக கொடுக்கிறார் மாணவர் சங்கத் தலைவர் ஜேசிடி பிரபாகரன்.
பின்னர் எம்ஜிஆர் விழாவில் பேசுகிறார். ”மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படிக்கிறார்கள் நடிகர்களாகிய நாங்கள் அவர்களிடம் காசு வாங்கி நாங்கள் அவர்களை மேலும் கஷ்டப்படுத்த விரும்ப வில்லை.
மாணவர் சங்கம் கொடுக்கும் பணத்திற்குப் பதிலாக நானே எனது சொந்தப்பணத்திலிருந்து நடிகர் சங்கத்திடம் கொடுக்கிறேன்” என்று சொல்ல, கை தட்டல் அள்ளிக்கொண்டுபோனது..
நட்சத்திர கலைவிழாவை நடத்தி மாணவர்களுக்கு மதிய உணவு போட்ட மாணவர் சங்கத்தலைவர் ஜேசிடி பிரபாகரைப் பின்னாளில் எம்எல்ஏவாக்கி அழகு பார்த்தது மக்கள் திலகம் அவர்களின் அதிமுக என்ற இயக்கம்..