சிறப்புக்கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்

கலைஞர் பல பட்டங்களால் மக்களால் சூட்டப்பட்டிருந்தாலும் நம்மை பொருத்தவரை இந்த பட்டம்தான் மிகப்பொருத்தமானது. எந்த நிலையிலும் அவர் சோர்ந்துபோனது கிடையாது.
வெற்றிகளை பெறமுடியாதபோது வாய்ப்புகளை இழந்திருக்கலாமே தவிர களத்தை அவர் இழந்ததேயில்லை..

அவரின் வாழ்க்கையை கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் என்பதைவிட வைத்து காக்கவேண்டிய பல்சுவை கலந்த பெருங்களஞ்சியம் என்றே சொல்லலாம்.
உழைப்பு, போர்க்குணம், தன்னம்பிக்கை எழுத்தாற்றல், பேச்சாற்றல் நினைவுத்திறன், கற்பனைத்திறன், சாதுர்யம், ரசனை என கலைஞரிடம் கொட்டிக்கிடந்தவை ஏராளம்.
திருவாரூர் பக்கம் திருக்குவளை என்ற குக்கிராமத்தில் தொடங்கிய வாழ்க்கை, மாநில அரசியலை தாண்டி ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் பல அத்தியாயங்களில் கதாநாயகனாக இருந்திருக்கிறது என்பது உண்மையிலேயே பிரமிப்பான விஷயம்.

சந்திரசேகர், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், போன்றேரெல்லாம் வகித்த பிரதமர் பதவி, எளிதாக கிடைக்கும் வாய்ப்பை அப்போதே பெற்றிருந்த தமிழர்கள் பட்டியலில் கலைஞருக்கு முக்கிய இடமுண்டு.

அகில இந்திய காங்கிரசுக்கு தலைமை வகித்த காமராஜர் பிரதமராகும் வாய்ப்பைபற்றி யோசிக்காமல் பிரதமர்களை உருவாக்கும் கிங் மேக்கர் என்ற பெயரோடு ஒதுங்கிப்போனார்
சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்ற பெயரோடு தேசம் முழுவதும் பலத்தோடு உலவிவந்த காங்கிரசை, முதன் முதலில் பிராந்திய அளவில் பெரும்பான்மை பலத்தோடு வீழ்த்தி மாநில ஆட்சியை கைப்பற்றியது அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகதான். 1967ல் ஒட்டு மொத்த இந்தியாவும் திமுகவை திரும்பிப்பார்த்தபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகளை தவிர்த்து காங்கிரசை எதிர்த்த மற்ற மாநில கட்சிக்கெல்லாம் மானசீக தலைமைப்பீடமாக தமிழ்நாடும் திமுகவும்தான் இருந்தன.

 

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே நாடாளுமன்றத்தில் பேச்சாற்றலால் கலக்கிய அறிஞர் அண்ணா, 1967ல் ஆட்சியை பிடித்த சொற்ப காலத்திலேயே துரதிஷ்டவசமாக இறந்துபோனார்.

69ல் முதலமைச்சரான கலைஞர், மாநில அரசியலையும் ஆட்சியையும் மற்றவர்களிடம் விட்டுவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்தியிருந்தால் நாட்டின் அத்தனை மாநில தலைவர்களும் அவர் பின்னால் திரண்டிருப்பார்கள். அவர்களை ஒருங்கிணைந்திருந்தாலே டெல்லி அரசியல் வரலாற்றின் முகமே மாறிப்போயிருக்கலாம்.

ஆனால் கலைஞர் அந்த முயற்சியை நினைத்துக்கூட பார்க்கவில்லை. மாநில அரசியலே போதும் என்று இருந்துவிட்டார், காங்கிரசுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்து பிரதமர் இந்திரா காந்தியின் நட்பு வளையத்துக்குள்ளும் போனார்.

முதலமைச்சர் கலைஞர் என்றாகி இந்த கட்டத்திற்கெல்லாம் நுழைவதற்கு முன் அவரின் வாழ்க்கையின் பக்கங்களை புரட்ட புரட்ட ஆச்சர்ய குறிகள்தான் நம் மூளைக்குள் படையெடுத்தவண்ணம் இருக்கும்

1924 ல்பிறந்த கலைஞர், செல்வசித்ரா என்ற சரித்திர கதையை கையெழுத்து பிரதியாக படைத்தபோதும், இந்தி திணிப்பை எதிர்த்து போராடியபோதும் ஒரே வயதுதான். ஆம் வெறும் பதிமூன்றே வயது… அப்போது துளிர் விட்டஎழுத்தாற்றல் பதினைட்டை நெருங்கும்போது சும்மா இருக்குமா? முரசொலி என்ற மாதாந்திர பத்திரிகையையே ஆரம்பித்தது.

பின்னாளில் மாபெரும் தலைவராக வளர்ந்துவிட்டு நிலையில் கலைஞரை சுற்றியிருப்பவர்களிடமும் சரி, கலைஞரிடமே கேட்டாலும் சரி, அவரின் உண்மையான முதல் மனைவி முரசொலிதான் என்பார்கள். அந்த அளவுக்கு அவர், தன் மனதில் தோன்றியவற்றை பேனாவில் ரத்தத்தை ஊற்றி எழுதாத குறையாய் முரசொலியில் எழுத்துக்களாய் வடித்தார்.
அதே பதினெட்டுவயதில்தான் அரசியல் ஆசான் அறிஞர் அண்ணாவையும் அவர் முதன் முதலாய் சந்தித்தார். அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையில் இளமைப்பலி என்ற கலைஞரின் கட்டுரை இடம்பெற்றதே இந்த சந்திப்புக்கு முக்கிய காரணமாய் அமைந்திருந்தது..

அண்ணாவுடன் கலைஞரும் சேர்ந்து பெரியாரை தலைவராக ஏற்றார்கள். நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியபின் அண்ணா பேச்சாற்றலில் மின்ன ஆரம்பித்தார்., கலைஞருக்கோ அரசியலையும் தாண்டி திரையுலகின் மீது ஒரு கண் விழுந்தபடியே இருந்தது. சில ஆண்டுகளிலேயே அது வசப்பட்டும் போனது.

11 ஆண்டுகள் திரையுலகில் போராடிய எம்ஜிஆர் கதாநாயகனாக நடிக்க முயன்று சில படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டன. அத்தகைய பின்னணியில் முதன் முதலாய் கதாநாயகனாக நடித்த படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. முழுவசனமும் அவருடையதே.

ஆனால் படத்தின் டைட்டிலில் பெயர் கொடுக்க சிலருக்கு மனம் வரவில்லை..கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன் ஏ.எஸ்.ஏ சாமி என்றே தயாரானது..ஆனால் உண்மை யான வசனகர்த்தாவின் திறமைகள் பற்றி படக்குழுவின் லேசாக முணுமுணுத்தபோதுதான் தடைக்கற்கள் யோசிக்க ஆரம்பித்தன..

பொதுவாக ஒரு படத்தின் டைட்டிலில் கடைசியாக இயக்குநர் பெயரைத்தான் போடுவார்கள்.. ஆனால் ராஜகுமாரி படத்திலோ, , இயக்குநர் பெயரை போட்டு விட்டு அதன்பிறகு கடைசியாக கலைஞரின் பெயரை உதவி ஆசிரியர் என்றும் உதவி டைரக்சன் சி.கே.ராமசாமி என்பவரின் பெயரையும் காண்பித்தார்கள்.

கலைஞரின் பேனா திரையில் முதன்முதலாய் சீறியது தேசப்பிதா காந்தியடிக்களுக்கு எதிராகத்தான். ஆரம்பகாட்சியிலேயே மன்னன் வாயிலாக ராமராஜ்யத்தை லைட்டா பதம் பார்த்திருப்பார்.

ராஜகுமாரியை தயாரித்த அதே ஜுபிடர் பிக்சர் அபிமன்யு படத்தையும் தயாரித்தது. எம்ஜிஆர் அர்ஜுனனாக நடித்த படம் கடைசி 20 நிமிடங்கள்தான் வருவார். வசனங்கள் அனல் பறக்கும், ஆனால் டைட்டிலில் கலைஞர் பெயர் மிஸ்ஸிங். வெறுத்துப்போன கலைஞர் ஜுபிடர் பிக்சர்ஸ்சை கைகழுவினார்

கலைஞர் வாழ்க்கையை அலசினால் 1947-1950 வரையிலான மூன்று ஆண்டு கால கட்டம் உண்மையில் பிரமிப்பானது, ஒரு மனிதன் ஒரே நேரத்தில் எத்தனை போராட்டங்களை சந்தித்திருக்கிறான் என்பதை பார்க்கும்போது அடேங்கப்பா என்றே சொல்லத்தோன்றும்
மனைவி பத்மாவதி கொஞ்சநாள் மட்டுமே வாழ்த்து முத்து என்ற பிள்ளையை பெற்றுக்கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார். 24 வயது இளைஞன் கையில் தாயில்லா மூன்று வயதுபிள்ளை.

இன்னொரு பக்கம் உயிர்மூச்சான முரசொலி பத்திரிகை நடத்தி பெரும் கடன், இரண்டாவது திருமணம், சினிமாவில் வசனம் எழுதினால் பேர் போடாமல் மறைக்கிறார்கள்.
இதையெல்லாம்விட அதுநாள்வரை பயணித்த பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து தனிக்கட்சி கண்ட அண்ணாவுடன் தானும் வெளியேறவேண்டிய நிலை…

இத்தனை நெருக்கடி கலந்த திருப்பங்களையும் சமாளித்தார் கலைஞர்.எம்ஏ பட்டதாரிகள் நிறைந்த திமுக தலைவர்களில், பெரிதும் படிக்காதவர்களில் ஒருவர் கலைஞர். ஆனால் எழுத்தும் பேச்சும் அவரை கைவிடவேயில்லை.

1950ல் எம்ஜிஆர் நடித்த மருதநாட்டு இளவரசியும் மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரியும் மு.கருணாநிதி என்றால் வசனங்கள் எப்படி இருக்கும் என்பதை நிரூபித்தன. பேரறிஞர் அண்ணாவுக்கு தொடர்ந்து வெற்றிக்கரமாய் வசப்படாமல் போன சினிமா, கலைஞருக்கு வெறும் 26 வயதிலேயே சுலபமாக வசப்பட்டது. ஓரே வரியில் சொன்னால், படத்துக்கு படம் துவம்சம் செய்யஆரம்பித்தார். வசனகர்த்தா உலகில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட இளங்கோவன் போன்ற நிறைந்த அரங்கில் கலைஞரும் தனக்கென ஒரு நாற்காலியை உறுதி செய்தார்.

 

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை ஒரு காலத்தில் நாடகமாக்கி ரேடியோவுக்கு அனுப்பியிருந்தார். இதெல்லாம் ஒரு நாடகமா என்று திருச்சி வானொலி நிலையம் திருப்பியடித்தது. அதையே மந்திரிகுமாரி என மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் மந்திரிகுமாரியாக்கி,இன்றளவும் பேசப்படுகிற வெற்றிக்காவியமாக்கினார். எம்ஜிஆர்

கதாநாயகன் என்றாலும் வில்லனாக வருகிற எஸ்ஏ நடராஜனுக்குத்தான் வசனங்கள் அதிகம்.

அரண்மனை நாயே அடக்குடா வாயை..

கொலையா அது, கலையப்பா, கலை… என படம்முழுவதும் வசனங்கள் தெறிக்கும்.. அந்த படத்தை கூர்ந்து கவனித்தால் பல விஷயங்களை சிரித்தபடியே நக்கல்பாணியில் தவிடுபொடியாக்கியிருப்பார்..

எனக்காக காத்திருந்து காத்திருந்து சாமியார் ஆகிவிட்டீர்கள் போல என மன்னன் மகளாக வரும் காதலி, தளபதி பார்த்திபனாய் இருக்கும் எம்ஜிஆரிடம் சொல்லுவார். அதற்கு எம்ஜிஆரின் அதகள பதில், ‘’நான் சாமியாராய் இருந்தால் நான் ஏன் உனக்காக காத்திருக்கப்போகிறேன், உங்கப்பனிடம் சொல்லி உன்னை என்னிடத்திற்கே வரவழைத்திருக்கப்போகிறேன்’’

யோசித்துபாருங்கள் இந்த வசனத்துக்குள் பொதித்துள்ள விஷயங்களை,
போலிச்சாமியார்களை நம்பும் மன்னர்கள், மடத்தனமாக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், மன்னர்களை ராஜகுரு என்ற போர்வையில் எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கலாம் என்பதை அப்படியொரு சாடலில் வெளிப்படுத்தியிருக்கும் கலைஞரின் பேனா.

அப்பேர்பட்ட மந்திரிகுமாரி படத்தையும் மாடர்ன் தியேட்டர்ஸ்சையும் நினைக்கும்போது, நமக்கு ஒரு நினைவு ஊஞ்சலாடுகிறது.

மந்திரிகுமாரி அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற படங்களை தயாரித்த தென்னிந்திய ஜாம்பவான் டிஆர் சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோ சேலத்துக்கு மிகப்பெரிய அடையாளம், பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடம் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருவெடுத்தது.

சேலம் மக்கள் மட்டுமல்ல, தமிழ்சினிமா உலகமே வரலாற்று சின்னமாக பாவித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் இடிக்கப்படபோகிறது என ஒரு தகவலை சொன்னார் சேலம் சன்டிவி செய்தியாளரான ஆருயிர் நண்பர் எஸ்டி குமரேசன்..

நாம் பெரிதும் நேசிக்கும் எம்ஜிஆர், கலைஞர், கண்ணதாசன் இசையப்பமைப்பாள் ஜீ.கே. ராமநாதன் போன்றோர் காலடிகளை அடிக்கடி பார்த்து பெருமைப்பட்டுக்கொண்ட அந்த வாயிலா என மனம் பதறியது.

நேரம் பார்த்து சன்டிவியில் அதுதொடர்பான செய்தியை போட்டோம். கலைஞர் பார்த்தார். விளைவு, இன்றும் அந்த நுழைவுவாயில் உயிரோடு இருக்கிறது.

நம்முடைய பெங்களுர் நண்பர் சிற்பி ராஜசேகரிடம் அதே வாயிலில் முன்பு வைத்து இதுபற்றி விவரித்தது மறக்க முடியாது. மறக்கமுடியுமா கலைஞரை, மறக்கத்தான் முடியுமா ?

அவரின் இரண்டாவது நினைவு தினத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில். மந்திரிகுமாரிக்கு பிந்தைய கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை, அது ஒரு விறுவிறுப்பான ரேஸ்… அதையும் புரட்டுவோம்..