சென்னை: எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன், சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை. ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக கூட்டம் சேர்க்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று  மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 34ம் ஆண்டு நினைவு தினம் அதிமுகவினராலும் நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி,  எம்ஜிஆர்  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக தலைவர் டிடிவி தினகரன், சசிகலா, ஆகியோர் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் சென்னை காவல்துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தனர். அதைத்தொடர்ந்து, தங்களது ஆதரவாளர்களை கூட்டி சென்னையில் மாஸ்காட்டும் முனைப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் ஒமிக்ரான பரவல் அதிகரித்துள்ளதால், மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக மததியஅரசு அறிவுறுத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக  எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் டிடிவிக்கு  கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக காவல்தறை தெரிவித்து உள்ளது.

இதையடுத்து, அதிமுக விசுவாசிகள்   அவரவர் பகுதிகளிலேயே அஞ்சலி செலுத்த சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல் சமூக பொறுப்புமிக்க அரசியல் இயக்கமாக பொதுமக்களிடையே நோய் பரவல் ஏற்பட காரணமாகி விடக்கூடாது என்கின்ற அக்கறையோடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்த உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து புறப்படவிருந்த கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் சென்னைக்கு வராமல் அவரவர் ஊர்களில் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தினை வைத்து இதய அஞ்சலியைச் செலுத்த வேண்டும் என்றும் தினகரன் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.