“எம்ஜிஆருக்கு ஒண்ணுமே தெரியாது”!

Must read

நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு 
“எம்ஜிஆருக்கும் ஒண்ணுமே தெரியாது”
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் வர வேண்டுமென்றால் பல மணி நேரம் பயணம் செய்த பிறகே அடையமுடியும்.
ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அப்படிப்பட்ட வகையில்தான் மாவட்டங்கள் பரந்து விரிந்து இருந்தன. 65ல் தர்மபுரி 74ல் புதுக்கோட்டை புதிதாக உருவாகின. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்ட நிர்வாகத்தை மக்கள் எளிதாக அணுகும் வகையில் மாவட்டங்களை பிரிக்கும் பணி வேகமாக ஆரம்பித்தது. ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் கோவையில் இருந்து பிரித்து ஈரோடு மாவட்டத்தை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து தாம் மறைவதற்குள் பத்தாண்டுகளில் எத்தனை மாவட்டங்களை உருவாக்கிவிட்டு போனார் எம்ஜிஆர் என்பதை தேடிப்போய் படியுங்கள்.
125 ஆண்டுகால வரலாற்றில் தமிழகத்தில் வெறும் நான்கே பல்கலைக்கழகங்கள். எம்ஜிஆர் தாம் மறைவதற்குள் தமிழகத்தில் எத்தனை புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கினார் என்பதை போய் தேடுங்கள்.  கூத்தாடி என்று கோமாளிகளால் கிண்டல் அடிக்கப்பட்ட எம் ஜி ஆரின் இன்னொரு முகம் தெரியவரும்.
தமிழ் மொழிக்கென்றே தனிப் பல்கலைக்கழகம் கண்டவன் அவன்.
ஒரு சாதாரண சினிமாவை 200 கோடியில் தயாரிக்கும் காலகட்டத்தில் லட்சோப லட்சம் குழந்தைகளுக்கு 100 கோடி ரூபாய் செலவில் சத்துணவு திட்டத்தை நிறைவேற்ற அவன் பட்ட பாட்டை சொன்னால் எளிதில் விளங்காது.
பொண்டாட்டியோடு சைக்கிளில் போனவனை டபுள்ஸ் என்றும் சைக்கிளில் லைட் இல்லை என்றும் பிடித்துக் கொண்டு போய் போலீசால் வெளுக்கப்பட்டவர்களை கேட்டுப்பாருங்கள் எம்ஜிஆரின் மகிமை தெரியும்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான குடிசைகள் முதன்முறையாக ஒரு லைட் சர்வீஸ் மூலம் மூலம் மின்சாரம் என்பதை பார்த்தது ‘ஒளிவிளக்கு’ எம்ஜிஆரின் ஆட்சியில்தான்.
40 ஆண்டுகளுக்கு முன்பே கடத்தப்பட்ட சாதனை அது.
ஆண்ட்ராய்டு போனில் வீடியோ காலில் பேசுகிற தலைமுறையிடம், வெளியூருக்கு போனில் பேச ட்ரங்க் கால் புக் செய்துவிட்டு இரண்டு மூன்று மணி நேரம் தந்தி ஆபீசில் காத்திருந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட சாதனைகள் ஒவ்வொன்றும் இன்றைக்கு சாதாரணமாகத்தான் தெரியும்.

More articles

Latest article