சென்னை:

குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதால் அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்த எம்ஜிஆர் அதிமுக பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா, தற்போது எம்ஜிஆர் அதிமுக பேரவையை அதிமுகவுடன் இணைக்க முடிவு செய்து உள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணைஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்  அதிமுகவும் இரண்டாக உடைந்த நிலையில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவரது அண்ணன் மகள் தீபா தொடங்கினார். அவரால் கட்சியை தொடர்ந்து நடத்த இயலாத நிலையில், கடந்த ஜூலை மாதம் 30ந்தேதி அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக, ஃபேஸ்புக் இணையதளம் மூலம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கு காரணமாக, தனக்கு,  குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தீபா பேரவையில் இருந்த சில   நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த தீபா பேரவையின் தலைமை நிலைய செயலாளர் தொண்டன் சுப்ரமணி அதிமுகவில் தீபா பேரவையை இணைக்க இருப்பதாகவும், அதற்கான கடிதம் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

“எங்கள் பொது செயலாளர் தீபாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு வரவில்லை என்றவர்,  அதிமுகவில் இணைய விரும்பி கடிதம் வழங்கி உள்ளோம். தலைமைக் கழகம் எங்களை என்று அழைக்கிறதோ அன்று நாங்கள் அனைவரும் எந்த நிபந்தனையின்றி இணைய உள்ளோம்.

ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார், தீபா அவர்கள் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என கூறியிருந்தார் அதனடிப்படையில் இன்று இந்த கடித்தை வழங்கயுள்ளோம் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களையும் இது குறித்து சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.