மெக்சிகோ
மெக்சிகோ நகரில் பூகம்ப இடிபாடுகளில் இன்னும் சிலர் உயிருடன் இருக்கலாம் என கருதி தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது
கடந்த 19ஆம் தேதி அன்று மெக்சிகோ நகரில் பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 என அளவிடப்பட்டுள்ளது. இந்த பூகம்பத்தில் சிக்கி 326 பேர் உயிரிழந்தனர். 11000 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 1500 வீடுகள் முற்றிலும் இடிந்து விட்டன.
கடந்த 1985ஆம் வருட பூகம்பத்துக்கு பின் கடுமையான விதிமுறைகளின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் சுமார் 10% கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. இது பற்றி உடனடியாக விசாரணை நடைபெறும் என மெக்சிகோ நகர மேயர் அறிவித்துள்ளார். இந்தக் கட்டிடங்களில் ஒரு பள்ளியும் ஒன்றாகும், இந்த பள்ளி இடிபாடுகளில் சிக்கி 19 குழந்தைகளும் 7 பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளை அகற்றி சிக்கியவர்களை மீட்கும் பணி ஒரு வாரமாகியும் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் சிலர் இடிபாடுகளுக்கிடையில் உயிருடன் இருக்கக் கூடும் என கருதப்படுவதால் அவர்களை தேடும் பணி தொடர்கிறது. அப்படி தேடுகையில் நேற்று ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தேடுதலில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
இன்னும் 72 மணி நேரத்துக்கு தேடும் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.