சேலம்: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்டு வரும்  நீர் திறப்பு 10ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேட்டூர் தண்ணீர்  இன்றும்  கடைமடை வாய்க்கால்களுக்கு வரவில்லை, அதற்குள் தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

 மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாக தொடர்ந்து வருகிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி,யாகவும் உள்ளது. இந்த நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவுக்கு 10ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  தொடக்கத்தில் வினாடிக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணை திறப்பால்  காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஒடினால், இன்னும்  கடைமடை வாய்க்கால்களுக்கு தண்ணீா் வரவில்லை எனவும், ஏரிகள், குளங்கள் நிரம்பவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காவிரி, டெல்டா மாவட்டங்களில் 2023 – 2024 ஆம் ஆண்டு சிறப்பு தூா் வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், நீா்வள ஆதாரங்களை தூா்வார ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், திருச்சி மாவட்டத்தில், ரூ.15.88 கோடி மதிப்பீட்டில் 375.78 கி.மீ. நீளத்துக்கு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் மற்றும் அரியாறு வடிநில கோட்டத்தின் மூலமாக ஆறுகளில் 21 பணிகள், பாசன வாய்க்கால்களில் 46 பணிகள், பாசன வடிகால்களில் 33 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எந்தவொரு பகுதியிலும் பணிகள் முழுமையாகவும், முறையாகவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை, புதர்கள் அகற்றப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி ள்ளனர். 

மேட்டூர் அணை  அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த மாதம் 30ஆம் தேதி எட்டியது. இதனையடுத்து அணையின் பாதுகாப்புக் கருதி 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதிகபட்சமாக உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1.48 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது நீர் வெளியேற்றம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறையத் தொடங்கியது.  தற்போது அணைக்கு  வினாடிக்கு 22,000 கன அடியாக இருந்து வருகிறது. மேலும், அணையில் இருந்து   நீர்மின் நிலையங்கள் வழியாக 17,500 கன அடியும், உபரி நீர் போக்கி வழியாக 4,500 கன அடியும் திறக்கப்பட்டு வந்தது. . இந்நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைந்ததையடுத்து, 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் 8 நாள்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.00 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடியும், கிழக்கு – மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணை திறப்பின்போது,  காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டி ஒடினாலும், தண்ணீர் இன்னும்  கடைமடை வாய்க்கால்களுக்கு வரவில்லை எனவும், ஏரிகள், குளங்கள் நிரம்பவில்லை, அனைத்து தண்ணீரும் வீணாக கடலில் சென்று கலக்கறிது என  விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்புக்கு வந்த தண்ணீரானது கொள்ளிடத்தில் 1.40 லட்சம் அடி வரையிலும், காவிரியில் 60 லட்சம் கன அடி வரையிலும் திறக்கப்பட்டது.  ஆனால், இந்த தண்ணீர் முறையாக கடைபடை பகுதிகளை சென்றடையவில்லை.  காவிரி, கொள்ளிடத்தில் உள்ள பிரதான வாய்க்கால்கள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களுக்கு முழுமையாக தண்ணீா் செல்லவில்லை என்று கூறும் விவசாயிகள், கிளை வாய்க்கால்களை தூர்வாரும்படி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை தூர்வாராத காரணத்தால்,  . வாய்க்கால்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் நாணல்கள், முட்புதா்கள், ஆகாயத் தாமரைகளால் தண்ணீா் செல்வதில் தடை ஏற்பட்டு, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீரே செல்லவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர்.

மேட்டூா் அணைக்கும், கல்லணைக்கும் இடையில் நாமக்கல், கரூா், திருச்சி மாவட்டங்களில் உள்ள ராஜ வாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூா் வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புகழூா் வாய்க்கால், தென்கரை வாய்க்கால், வடகரை வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால், கட்டளைமேட்டு வாய்க்கால், திருவரங்கம் நாட்டு வாய்க்கால், புதுவாத்தலை வாய்க்கால், ராமவாத்தலை வாய்க்கால், அய்யன் வாய்க்கால், புது அய்யன் வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால்களில் அதன் முழு கொள்ளளவுக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் டெல்டா பகுதிகளான அந்தநல்லூா் வட்டாரம் மற்றும் புலிவலம் பாசனப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள், குழுமணி, பேரூா், மருதாண்டா குறிச்சி, மல்லியம்பத்து, முள்ளிக்கரும்பூா், ராமவாத்தை, கொடியாலம், எட்டரை, போசம்பட்டி, போதாவூா், பள்ளகாடு, சுண்ணாம்புகாரன்பட்டி உள்ள பாசன பகுதி வடிகால் வாய்க்கால்களுக்கும் தண்ணீா் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகுறித்து கூறிய நீா்வளத்துறை அதிகாரிகள்,   கல்லணை வரையில் உள்ள 12 பிராதன கால்வாய்களில் முழுமையாக தண்ணீா் திறக்கப்பட்டது மேலும் பல பிரதான வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்களில் முழுமையாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த வாய்க்கால்களில் இருந்து வடிந்து நீா் பெறும் வடிகால் வாய்க்கால்களுக்கு மட்டுமே தண்ணீா் செல்லவில்லை என்று கூறியதுடன்,   குடிமராமத்து பணிகளுக்காக மாவட்டத்துக்கு  அரசு ஒதுக்கப்பட்ட இலக்கின்படி பாசனக் கால்வாய்களை தூா் வாரியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.