சென்னை; 12ந்தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சேலம் புறப்படுகிறார் ..

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) சேலம் மாவட்டம் செல்கிறார். நாளை மாலை மேட்டூர் செல்லும் போது, சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திமுக தலைமை செய்து வருகிறது. இந்த ‘ரோடு ஷோ’வில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், அப்போது சாலை இருமங்கிலும் குவிந்திருக்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
தொடர்ந்து மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
இதையடுத்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை மேட்டூர் அணைக்கு சென்று பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வருகிறார்.
காலை 11 மணிக்கு இரும்பாலை பகுதியில் உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.