சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 1.05 லட்சம் கன அடியாக உயர்வு. சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், முழு கொள்ளவை எட்டியுள்ள மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இன்று (ஜுலை 28) காலை நிரவலரப்பட்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி வீதமும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 82,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
இதன் காரணமாக, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி, காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, அரியலூர், நாமக்கல், கரூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் விடுத்துள்ள வெள்ள அபாய அறிவிப்பில், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,00,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.