மேட்டூர்: மேட்டூர் அணை  நடப்பாண்டில் (2024)  3வது முறையாக நிரம்பி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால்  அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஏரி, குளங்களில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக,  கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி உள்ளது. மேலும், தமிழ்நாட்டிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி  பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  இதன் காரணமாக அணை  முழு  கொள்ளவான 120 அடியை ஆண்டின் இறுதி நாளான டிசம்பவர் 31ந்தேதி அன்று எட்டியது.  இதன் மூலம் 2024ம் ஆண்டில் 3வது முறையாக அணை நிரம்பி உள்ளது. இதனால்,  டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை ஏற்கனவே 2024  ஜூலை 30ம் தேதி முதல் முறையாக முழு கொள்ளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டிய நிலையில், தொடர்ந்து, 2024  ஆகஸ்ட் 12ம் தேதி 2வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.  இந்த நிலையில், தற்போது, 2024 டிசம்பர் 31ந்தேதி அன்று மூன்றாவது முறையாக அணை நிரம்பி உள்ளது.

இதையடுத்து, 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக வரும் தண்ணீர் நீர்மின் நிலையம் வழியாக திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் திறக்கப்படுவதால் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி துவங்கியது. டெல்டா பாசனத்திற்கு 136 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நடப்பாண்டில் நேற்று வரை 7 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியதால் பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  மேட்டூர் அணையில் தற்போது,  நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்து வருகிறது.