சென்னை:

னமழையின்போது மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த வழக்கில், நில உரிமையாளரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கிய நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே   உள்ள நடூர் கிராமத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக அந்த கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியனம்,  என்பவருடைய வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்ட கருங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் திடீரென இடிந்து அருகில் இருந்த 4 வீடுகள் மீது விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக அந்த காம்பவுண்டு சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் மீது  புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலாளர் சாமுவேல் ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தீண்டாமை சுவர் என கூறப்படும் அந்த சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டப்பட்டதா எனவும், சுற்றுச்சுவர் கட்டப்பட்டபோது குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் சுவர் எழுப்பகூடாது என விதிகள் ஏதும் இருந்ததா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த வழக்கில் நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.