சென்னை

டுத்த 2 தினங்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..

புரெவி புயல் பாம்பன் பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது..  ஆனால் அது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.  இதனால் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம், “மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அங்கேயே நிலைகொண்டு ஒரே இடத்தில் உள்ளது.   அடுத்த 24 மணி நேரத்தில் இது மேலும் ஆழ்ந்த காற்றத்தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும்.

அதன் பிறகு இது ராமநாதபுரம் பகுதி வழியாக நகர்ந்து தெற்கு கேரள பகுதியை நோக்கி நகர உள்ளது.  இதனால் 2 நாட்களுக்கும் கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம்.  அவ்வப்போது கனமழையும் பெய்யக் கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.