சிவகங்கை: தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 27 திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7457 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் எங்கும் குடிநீர் பிரச்னை இருக்கக் கூடாது என்ற அடிப்படையில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்று கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பொது பெயரில் அழைக்க கோரி பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வந்துள்ளன. அவற்றை பரிசீலித்து பரிந்துரை அளிக்கும் வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மாவை தலைவராக கொண்டு குழு அமைத்து தமிழக அரசு கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த குழு பல கோரிக்கைகளை பரிசீலித்து பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று, 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை இனி தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் பரிந்துரை செய்யப்படும்.

7 சாதியினருக்கும் தேவேந்திர குல வேளாளர் என்று பொது பெயரிட்டாலும், சமூக பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு பட்டியலின வகுப்பில் தொடரும் என்று இந்த குழு பரிந்துரைத்துள்ளது. இப்பிரிவினர் ஏற்கனவே பெற்றுள்ள சலுகைகள் தொடரும், அதற்கான ஆணைகளை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்கும் என்று கூறினார்.