சென்னை:

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், வரும் ஞாயிறன்று  (22ந்தேதி) அரசு  மற்றும் தனியார் பேருந்துகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மெட்ரோ ரயில் சேவையும் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  22ம் தேதி பிரதமர் மோடி கூறியபடி சுய ஊரடங்கு பின்பற்ற தமிழக முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மத்திய மாநில அரசுகள் கல்வி நிறுவனம் உள்பட அனைத்து பொது இடங்களையும் மூட உத்தரவிட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து, சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

இதன் காரணமாக மாநகர பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக சென்னையில் நாள் ஒன்றுக்கு 3200 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது 2,500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் மாநகர பஸ்களை சுத்தமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் 22ந்தேதி அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.  22ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடாது  என கூறப்பட்ட உள்ளது. அதுபோல தனியார் பேருந்துகளும் இயக்கப்படாது அதன் நிறுவனர்கள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே சரக்கு லாரிகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.