கடலூர்: கடலூர் கள்ளச்சாராய வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், கடலூர் அருகே பண்ருட்டியில் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய செயல்படாத பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில், 65 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். 65 பேரின் உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராயத்தில் 29.7% வரை மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. அதன்படி, சாராயம் விற்பனை செய்த திமுகவைச் சேர்ந்த கண்ணுக்குட்டி உள்பட 10-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மெத்தனால் விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான மாதேஷிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், பயன்பாட்டில் இல்லாத பெட்ரோல் நிலையத்தில் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்தார்.
அதன்பேரில், பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரில் பயன்பாட்டில் பகுதியில் உள்ள பழைய செயல்படாத பெட்ரோல் பங்க் ஒன்றில் மெத்தனால் மற்றும் ரசாயனம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2000 லிட்டர் மெத்தனால் மற்றும் ரசாயனங்களை பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீசார் அந்த பெட்ரோல் பங்குக்கு சீல் வைத்தனர்.