புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் மீதேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரோத எந்தவொரு திட்டத்திற்கும் எந்த காலத்திலும் அனுமதி கொடுக்கப்படாது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
புதுக்கோட்டை கோயில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று, அவர்களுக்கு ஆளுதல் கூறிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் அவர்களுக்கு தனது தனிப்பட்ட முறையில் நிவாரணம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, எதிர்பாராமல் நிகழ்ந்த தேர் விபத்தில் காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சென்று ஆறுதல் வழங்கினோம். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், தேர் விபத்து தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குழு விசாரணை செய்து அறிக்கை அளித்த பின்னர் தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டம், செஸ் ஒலிம்பியாட் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய அமைச்சர்,
தமிழ்நாட்டில் எந்த ஒரு காலத்திலும் விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் செயல்படுத்தப்படும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று உறுதிப்பட தெரிவித்தவர், திருவாரூரில் ஏற்கனவே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் போடப்பட்டுள்ள குழாயில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட கசிவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் அதனை நிரந்தரமாக மூடுவதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதே தவிர வேறு எந்த திட்டத்தை தொடங்குவதற்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றும், அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களும் அவர்கள் நாட்டில் இருப்பது போன்ற உணர்வுகளை வெளிப்படுத்திகின்ற வகையில் அவர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது என்றார்.