“கேட்பவர்கள் கேட்கலாம், இது அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி துடைத்துப் போட்ட டிஸ்யூ.”

“கம்பெனிக்கு கட்டுப்படியாகுற விலை ரூ. 7.5 கோடி, கேக்கறவங்க கேக்கலாம்…. ஒரு தரம்….”

ஏதோ திரைப்படத்தில் வந்த வசனம் இல்லை, தற்போது இணையதளத்தில் வைரலாக பேசப்படும் ஒன்று.

ஆம், பார்சிலோனா கால்பந்து அணியில் இருந்து வெளியேறிய மெஸ்ஸி, இருபது ஆண்டுகளாக தான் விளையாடி வந்த அணியை விட்டு வெளியேறுவது குறித்து கண்ணீர் மல்க சமீபத்தில் பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியின் போது, அவர் சிந்திய கண்ணீரை டிஸ்யூ பேப்பரில் துடைத்து தூக்கிப் போட்டார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர், அவர் தூக்கிப் போட்ட டிஸ்யூ பேப்பரை சேகரித்தார்.

இந்த டிஸ்யூ பேப்பரை தற்போது இணையத்தளம் மூலமாக ஏலம் விட நினைத்த அந்த ரசிகர் இதற்கு ஒரு மில்லியன் டாலர் விலை நிர்ணயித்திருக்கிறார், அதிக விலைக்குக் கேட்டுக்கும் நபருக்கு இதை கொடுக்க இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த டிஸ்யூவில் மெஸ்ஸியின் மரபணு அடங்கி இருப்பதால் இதை உபயோகப்படுத்தி பிற்காலத்தில் மெஸ்ஸியைப் போன்ற ஒருவரை வார்த்தெடுக்கலாம்” என்றும் இதற்கு விளம்பரப்படுத்தியுள்ளார்.

இதன் நம்பகத்தன்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பி இருக்கும் அதே நேரத்தில், அவர் பயன்படுத்திய அதே தரத்திலான டிஸ்யூ பேப்பர்களின் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.